இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
இராஜராஜ சோழன் சோழர் சோழர்கள்
முதலாம் இராஜராஜ சோழன் கிபி 985 முதல் 1014 வரை அரசு புரிந்தான். 1010இல் தஞ்சை பெரு உடையார் சிவன் கோயிலைக் கட்டி முடித்தான். சிவபாதசேகரன் (சிவனது திருவடியைத் தலையில் தரித்தவன்) என்னும் சிவதீக்ஷா நாமம் பெற்றான்.
அவன் தஞ்சைக் கோயிலைப் பராமரிக்க பாசுபத சைவ குருமார்களை நியமித்தான். இவர்களில் சிலர் வட நாட்டிலிருந்து வந்தவர்கள்.
இராஜராஜ சோழனுக்குப் பாசுபத சைவத்தில் அதிகமான பற்று இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.
இராஜராஜன் கி.பி, 1014இல் காலமானான். மகன் இராஜேந்திரசோழன் சக்கரவர்த்தி ஆனான். இவனும் பாசுபத சைவ குருமார்களைப் பெரிதும் ஆதரித்தவன். இந்தப் பின்னணியில் உடையாளூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து கிடைக்கும் கல்வெட்டுகளைப் பார்ப்போம். 1
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உடையாளூர் கிராமம் உள்ளது. ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகரான பழையாறை நகரின் ஒரு பகுதி இவ்வூர்.
சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் அருமொழி தேவவளநாட்டு திருநறையூர் நாட்டு ஸ்ரீ மாகேஸ்வரத்தானம் ஸ்ரீ சிவபாதசேகர மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
இறைவனின் பெயர் ஸ்ரீசிவபாதசேகர ஈஸ்வரமுடையார் என்பதாகும். அம்மன் கோயில் பிற்காலத்தது.
நிறைவு பெறாத ஒரு துண்டு கல்வெட்டில் எப்போதும் இனியாள் என்ற பெயர் வருகிறது. ஒருவேளை இது இறைவியின் பெயராக இருக்கலாம். இன்றைய பெயர் சங்கர பார்வதி அம்மன்.
வளநாடு, ஊர், இறைவன் ஆகிய பெயர்கள் இராஜராஜனது சிறப்புப் பெயரில் உள்ளன.
இக்கோயிலில் உள்ள மிகப் பழைய கல்வெட்டு இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழன் என்ற பெயரைக் காணலாம். எனவே இவ்வூரையும் கோயிலையும் இராஜேந்திரன் தனது தந்தையின் நினைவாக எடுப்பித்தான் எனக் கொள்வோம்.
கோயிலில், கர்ப்பக்கிரகத்தில் பல கல்வெட்டுகள் உள்ளன. சில கல்வெட்டுகள் சிதைந்து உள்ளன. அவற்றில் சில இராஜேந்திர சோழனுக்கு உரியனவாகும் இருக்கலாம்.
முழுமையாகக் கிடைக்கும் கல்வெட்டுகளில் மிக பழமையானது முதற்குலோத்துங்கனுக்கு உரியது. மற்றவை பிற்காலச் சோழர், பாண்டியர்களுக்கு உரியவை. கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்களை கூறுகின்றன.
முதல் குலோத்துங்கனின் கல்வெட்டைப் பார்ப்போம். 2
இதன் காலம் கி.பி. 1119.
இறைவனின் பெயர் ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்தானம் ஸ்ரீ சிவபாதசேகரமங்கலத்து ஸ்ரீகைலாயம் உடையார் ஸ்ரீசிவபாதசேகர ஈஸ்வரமுடைய மகாதேவர் என்று உள்ளது.
கோயிலுக்கு மாகேஸ்வர பெரும் தரிசனத்தார் அளித்த நிவந்ததைக் கூறுகிறது.
மாஹேஸ்வர பெரும் தரிசனத்தார் என்பது பாசுபதர். இவர்களின் உட்பிரிவுகளான மகாவிரதிகள், காபாலிகர், பைரவர் ஆகிய சைவர்களைக் குறிக்கும்.
குலோத்துங்கன் அவனுக்குப் பின் அரசாண்ட சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் ஸ்ரீமாஹேஸ்வரஸ்தானம் ஸ்ரீசிவபாத சேகர மங்கலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
பாசுபதர்கள் உள்ள ஊர் ஸ்ரீமாகேஸ்வரஸ்தானம் என்று அழைக்கப்படும். எனவே இவ்வூரில் பாசுபதர் இருந்துள்ளனர் என்பதை அறிகிறோம்.
இவ்வூரின் வடமேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரம் கிராமம் உள்ளது. இது சோழர்களின் பழைய தலைநகரான பழையாறை ஆகும்,
பள்ளிப்படைக் கோயில்
இவ்வூரில் உள்ள இராமநாதன் கோயில் இராஜேந்திர சோழனால் கி.பி. 1019 இல் எடுக்கப்பட்டது. அவனது அரசியருள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார் இறந்தவுடன் அவளின் பூதவுடல் மீது சிவன் கோயிலைக் கட்டினான். இது ஒரு சமாதிக் கோயில். கல்வெட்டில் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
இராஜேந்திரன் தனது பிறந்த நக்ஷத்திரமான திருவாதிரை நாட்களிலும் இறந்துபோன தனது மனைவியின் நக்ஷத்திரமான ரேவதி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்ய நிவந்தங்கள் கொடுத்தான்.
இக்கோயிலை மகாவிரதிகள் என்னும் பாசுபதர்கள் நிர்வகித்தனர். இவர்களுக்கென்று தனி மடம் இருந்தது. அதனை லகுலீச பண்டிதர் என்பவர் நிர்வகித்தார்.3
பொதுவாக சிவதீக்ஷை பெற்ற ஓர் அரசனோ அல்லது அரசியோ இறந்து போனால் பூத உடல் மீது சிவன் கோயில் கட்டுவார்கள். இதற்குப் பள்ளிப்படை கோயில் என்று பெயர்,
பள்ளிப்படைக் கோயில்களை அதாவது சுடுகாடு அல்லது இடுகாடு கோயில்களை (சமாதிக் கோயில்களைப்) பாசுபதர்கள் நிர்வகித்தனர் என்பதை பல கல்வெட்டுகளால் அறிகிறோம்.
நிற்க, உடையாளூருக்கு வருவோம். இவ்வூர் மஹேஸ்வர பெரும் தரிசனத்தாராகிய பாசுபதர்களின் இருப்பிடமான ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்தானமாகும். அருகில் பட்டீ ச்சுரத்தில் சமாதிக்கோயிலைப் பராமரிக்கும் மகாவிரதிகள் என்னும் பாசுபதர்கள் இருந்துள்ளார்கள் என்பதையும் பார்த்தோம்,
பாசுபத வேடத்தானாகிய சிவபெருமானின் உறைவிடம் சுடுகாடு ஆகும் என்று திருவீழிமிழலைப் பதிகத்தில் அப்பர் பெருமான் கூறுகிறார்,
(சவம் தாங்கும் மயானத்துக்குச் சாம்பல் என்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை பவம் தாங்கும் பாசுபத வேடத்தானை… தேவாரம் 6-50-2)
தொகுத்து நோக்கினால், உடையாளூரிலும் சமாதிக் கோயில் அதாவது பள்ளிப்படை கோயில் இருந்து இருக்குமோ என்று தோன்றுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வூர் பால்குளத்து அம்மன் கோயிலில் இருந்து கிடைக்கும் ஒரு கல்வெட்டு அரிய செய்தியைத் தருகிறது.
இக்கல்வெட்டு முதல் குலோத்துங்கனுக்கு உரியது. இதன் காலம் கி பி 1112. இக்கல்வெட்டை மத்திய அரசின் கல்வெட்டு ஆய்வுத் துறையினர் 1927 இல் படி எடுத்து சாசன என் 315 ஆக வெளியிட்டுள்ளனர்.
1927 இல் கல்வெட்டுடன் கூடிய தூண் விஷ்ணு கோயிலில் இருந்தது. பிற்காலத்தில் திருப்பணியில் பால்குளத்து அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டது.
தமிழ்நாடு தொல்பொருள் துறையினரும் சில ஆண்டுகளுக்கு முன் படியெடுத்தனர். கல்வெட்டின் முழுவாசகம் வெளியிடப்படாததால் இதன் அருமை தெரியாமல் போயிற்று.
இனிக் கல்வெட்டின் முக்கிய பகுதியை பார்ப்போம். இக்கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 42ஆவது ஆட்சியாண்டுக்குரியது,
“…. ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜ தேவரான ஸ்ரீசிவபாதசேகர தேவர் திரு மாளிகை முன்பில் பெரிய திருமண்டபம் ஜீரணித்தமையில்
இம்மண்டபம் எடுப்பித்தான் பிடவூர் வேளா அரிகேசவனான கச்சிராஜன்
திருக்கருவூரயகம் செய்து நின்ற ஜயசிங்க குலகால வளநாட்டுக் குளமங்கல நாட்டுச் சாத்தமங்கல முடையான் நம்பிடாரன் நாடறிபுகழன் இடன் விரதங்கொண்டு செய்தார்…”
செய்தி இதுதான்
ஸ்ரீ சிவபாதசேகரனமங்கலத்தில் (உடையாளூரில்) எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகரருக்குத் திருமாளிகை இருந்தது. ( ஸ்ரீ என்று மூன்று தடவை வருவதை கவனிக்கவும்).
இதன் முன் இருந்த பெரிய திருமண்டபம் ஜீரணித்துவிட்டது. இதனை பிடவூர் வேளாண் ஆரிகேசவனான கச்சிராஜன் சார்பாக, ஜெயசிங்க குலகால வளநாட்டு, குளமங்கல நாட்டு, சாத்த மங்கலத்து புகழறிநாடன் என்னும் பிடாரன் (தேவாரம் ஓதுபவர்) திருப்பணி செய்து வைத்தான்.
ஸ்ரீ சிவபாதசேகரரான ஸ்ரீ இராஜராஜ தேவர் கி.பி. 1014 இல் இறந்து போனார். 98 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஸ்ரீ சிவபாதசேகரமங்கலத்தில் (உடையாளூரில்) எழுந்து அருளுகிறார். இது எப்படி முடியும்? ஆம் முடியும்.
இராஜராஜனின் நினைவாக ஒரு கோயில் கட்டி இருக்கிறார்கள். அவனது அமரத்வத்தைக் குறிக்கும் வகையில் இராஜராஜனின் உருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். இவ்வூரில் இராஜராஜன் இறந்திருக்க வேண்டும். அவன் பூத உடல் மீது கட்டப்பட்ட சிவன் கோயிலின் திருமாளிகையில் இராஜராஜனது திருவுருவச் சிலையை வைத்து வழிபட்டு இருக்கலாம். 4
இம்மாதிரியாக, சிவலிங்கம், திருவுருவச் சிலை வழிபாட்டைச் சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் கல்வெட்டும் கூறுகிறது (கி.பி. 400). 5
அங்கும் பாசுபதர்களே வழிபாடு செய்துள்ளனர்.
உடையாளூர் கைலாசநாதர் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியனின் கல்வெட்டு, கி.பி. 1283, இவ்வூரில் இருந்த அபிமுக்தம் மடத்தைக் குறிப்பிடுகிறது. இதனை வித்யாசிவ பண்டிதர் என்னும் பாசுபத சைவர் நிர்வகித்தார்.
அபிமுக்தம் என்பது காசியை குறிக்கும். (வாரணாசி). அவ்வூரும் சுடுகாடு ஷேத்திரம் என்பது நோக்கத்தக்கது,
அப்படியானால் உடையாளூரில் இராஜராஜனின் சமாதிக் கோயில் எங்கே உள்ளது? தெரியாது. கால வெள்ளத்தில் அக்கோயில் மறைந்திருக்க வேண்டும். அக்கோயிலின் கல்வெட்டுத் துணை தான் அம்மன் கோயிலில் காண்கிறோம்.
இவ்வூரில் உள்ள விஷ்ணு கோயில் பிற்காலத்தியது. இதில் கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. சிவன் கோயிலைப் பற்றி பேசுகின்றன. பாசுபத சைவக் குருமார்கள் பெயர்களும் வருகின்றன. எனவே இக்கல்வெட்டு பகுதிகள் இராஜராஜனின் சமாதிக் கோயில் அழிந்து போனபிறகு விஷ்ணு கோயில் கட்டுவதற்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
இக்கோயிலில் கல்வெட்டுடன் இருந்த துாணைத்தான் பிற்காலத் திருப்பணியில் பால்குளத்து அம்மன் கோயிலில் வைத்து உள்ளதாகக் கூறுகிறார்கள்.
இராஜராஜனை உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் என்று கல்வெட்டுகள் அறிமுகப்படுத்துகின்றன.
உடையாரின் ஊர் உடையாளூர் என்று ஆகிவிட்டதோ?
இவ்வூரின் வடக்கே ஒட்டத் தோப்பு என்னும் புஞ்சை வயலில் சாய்ந்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கத்தின் தலைப்பகுதி பாணத்துடன் தெரிகிறது. இது சுமார் 10 அடி ஆழம் வரை புதைந்து உள்ளதாகக் கூறுகிறார்கள். அச்சுவர்களில் இருந்து எடுக்கப்பட்ட சில கற்கள் பக்கத்தில் உள்ள குழாய் அடியில் உள்ளன. இவை 11ஆம் நூற்றாண்டு சோழர்காலச் செங்கல் கற்கள் போன்று உள்ளன.
ஒருவேளை இவ்விடத்தில்தான் இராஜராஜனின் சமாதி கோயில் இருந்ததோா? எது எப்படியோ இராஜராஜசோழன் அமரனான இடம் உடையாளூர் என்பதில் ஐயமில்லை.
தொல்பொருள் துறையினர் அகழ் ஆய்வு செய்தால் புதிய செய்திகள் கிடைக்கலாம்.
Foot Note:
- 303 of 315 of A.R.EP. 1927
- 306 of 1927
- 271 off 1927; A.R.EP. 1926 – 27 page – 77
- N. Sethuramen – presidential address – 7th annual Congress of the Place Names Society of India held at Gorakhpur Uttar Pradesh in February 1986. Published in volume eight – studies in Indian Place Names published in 1986
- Bhandarka – E.I XI-I.I: Corpus Indicarum volume III page 134; Edition 1981
- 311 of 1927