குடந்தை சேதுராமன் – தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வெட்டு அறிஞர்
குடந்தை சேதுராமன் – தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வெட்டு அறிஞர்
“நான் ஒரு பழமை பித்தன். அருமையான ஆலயங்களைக் கண்டால் ஆனந்தக் கண்ணீர் விடுவேன். இடிந்த கோவில்களைக் கண்டால் நானும் இடிந்து போய் விடுவேன். பாழடைந்து இடிந்து கிடக்கும் ஆலயங்களுக்குச் சென்று அபிப்பிராகாரங்களில் சிறிதாவது படுத்துப் புரளுவதில் ஒரு ஆனந்தம் …..நான் ஒரு கல்வெட்டுப் பித்தன். கல்வெட்டுகளைப் படிக்கும் போதெல்லாம் என்னை மறந்து பல நூற்றாண்டுகளுக்கு பின் சென்றுவிடுவேன்.”
– குடந்தை சேதுராமன்
பிரபல கல்வெட்டு அறிஞரும், கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பிரைவேட் லிமிடெட் இயக்குனருமான குடந்தை N. சேதுராமன், ராமன் அண்ட் ராமன் நிறுவனத்தின் ஸ்தாபகரான P. S. நாராயண ஐயர் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். கலியுக வருஷம் 5091, சக வருஷம் 1852, பிரமோதூத ஐப்பசி மாதம் 18ஆம் தேதி சுக்ல பக்ஷது துவதசியும், உத்திரட்டாதியும் கொண்ட திங்கட்கிழமை, அதாவது கி.பி. 1930 நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று பிறந்தார். இளமயில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ரசாயனப் பட்டப் படிப்பை முடித்த இவர் சென்னையில் The Madras Institute of Technology இல் மோட்டார் வாகன பொறியியலில் (Automobile Engineering ) பட்டம் பெற்றார் . தந்தையின் விருப்பப்படி பேருந்துகள் ஓட்டும் (Bus Transport ) தொழிலில் ஈடுபட்டார். பல தொழிற்சாலைகளில் டீசல் என்ஜின் சம்பந்தமான சிறப்பு பயிற்சிகள் பெறுவதற்காக 1962இல் இங்கிலாந்து சென்றார். 1968இல் தந்தை காலமான பிறகு பேருந்துகள் தேசிய மையமாக்கப்பட்டதால் புதிய டிராக்டர்கள், கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டார் இவர்.
1975இல் குடந்தை சேதுராமன் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாறுதல் ஏற்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் தீவிரமாக ஈடுபடலானார் . இதனால் வான சாஸ்திரத்தை கற்றுக்கொண்டார். நூறு ஆண்டுகளாக வெளிவந்துள்ள கல்வெட்டு சாசன அறிக்கைகள், ஆய்வு சம்பந்தமான நூல்கள், சங்கிலி தொடர்போல் படிக்கலானார் இவர். இலக்கியங்களையும் படித்து வரலாற்றிற்கு தேவையான குறிப்புகளையும் சேகரித்தார். சோழர்கள், பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களால் கட்டுரைகளும் வெளியிட்டார் இவர். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே , கல்வெட்டு ஆராய்ச்சியிலும் விசித்திரமான ஆர்வம் இவருக்கு இருந்தது.
சரித்திர நூல்களை புரட்டிப் பார்த்த குடந்தை சேதுராமனுக்கு ஒவ்வொரு நூலும் ஒன்றுக்கொன்று முரண் பட்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதன் அடிப்படை கரணம் என்ன என்ற கேள்வியை தொடர்ந்த சேதுராமன், கால ஆராய்ச்சியில் ஏதோ ஒன்று நிறைவு பெறாது இருப்பதைக் கண்டார். இதற்கு முன் ஆய்வு செய்த ஜெர்மன் பேராசிரியர் கீல் ஹார்ன் (1907), ஸ்வாமிக்கண்ணுப்பிள்ளை (1913), ராபர்ட் சீவல் (1915) இவர்களின் கணிப்புகளை ஆராய்ந்தார். கல்வெட்டின் காலங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருப்பினும் பெயர் குழப்பத்தினால் சிலவற்றின் காலங்களை நிர்ணயிப்பதில் இவர்களுக்குத் தடங்கள் ஏற்பட்டன. அரசன் இவனோ? அல்லது அவனோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காலங்களைக் கொடுத்திருந்தனர். அரசனின் ஆட்சி ஆண்டில் 365 நாட்கள் இருப்பதாக அவர்கள் கருதினர். ஆனால் அக்காலத்து மன்னர்கள் இம்முறையைக் கைப்பற்றவில்லை. மன்னனின் ஆட்சி ஆண்டு நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒரு ஆட்சி ஆண்டில் 354 லிருந்து 384 வரை இருக்கும். இதைத்தான் ‘யாண்டு’ என்று கூறுவார்கள். யாண்டின் அளவைத் தெரிந்து கொண்டால் ஒரே பெயரில் சம காலத்திலோ அல்லது வேறு வேறு காலத்திலோ இருந்த அரசர்களை அறிந்து கொள்ள முடியும். இந்த உண்மையை உலகிற்கு கொண்டு வந்தார் சேதுராமன்.
தமிழ், வடமொழி, கர்நாடக, தெலுங்கு கல்வெட்டுகள், இலக்கியங்கள், ஹிஜ்ரா என்ற காலண்டர் முறை, மேலும் நூறு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சாசன அறிக்கைகள் இவற்றின் துணை கொண்டு பாண்டியர் வரலாற்றை ஆராயத் தொடங்கினர் இவர். ஜெர்மன் பேராசிரியர் கீல் ஹார்ன், ஜாகோபி, ராபர்ட் சீவல், ஸ்வாமிக்கண்ணுப்பிள்ளை போன்றோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கல்வெட்டின் துணைகொண்டு பாண்டியர் வரலாறு பற்றிய அடிப்படை ஆராய்ச்சியை செய்தார். இதன் பயனாக 1978இல் தி இம்பீரியல் பாண்டியாஸ் (The Imperial Pandyas ), மெடீவல் பாண்டியாஸ் (Medieval Pandyas ) என்னும் நூல்களை வெளியிட்டார். பாண்டிய மன்னர்களின் காலங்களை கணிக்க, தி பாண்டியன் கிறோனோலஜி (The Pandiyan Chronology ) என்னும் கட்டுரையை எழுதினார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் ஜர்னல் ஆப் எபிஃரபிகல் சொசைட்டி ஆப் இந்தியா (The Journal Of Epigraphical Society Of India ) இல் வெளிவந்தன. சோழ பாண்டியன் (Chola Pandiyan ), சோழ கங்கன் (Chola Gangan ), சோழ லிங்கேஸ்வரன் (Chola Langeswaran ), சோழ கேரளன் (Chola Keralan ) எனும் இவரது ஆங்கில நூல்களை பிலேஸ் நேம்ஸ் சொசைட்டி ஆப் இந்தியா (Place Names Society of India ) வினர் 1987 ல் வெளியிட்டனர். சேதுராமன் அவர்களின் கல்வெட்டுப் பணிகளை பாராட்டிய எபிகிராபிகல் சொசைட்டி ஆப் இந்தியா (Epigraphical Society of India ) 1998 மே மாதம் கேரளாவில் திருச்சூரில் நடைபெற்ற 24 வது ஆண்டு விழாவில் 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்வெட்டு அறிஞர் என்ற பட்டத்தை வழங்கி, சமஸ்கிருத பாராட்டுரை அடங்கிய செப்புப் பட்டயத்தை வழங்கி கௌரவித்தது.
குடந்தை சேதுராமன் இயற்கையை மெய்மறந்து ரசிப்பவர். பறவைகள், மிருகங்கள் மற்றும் பசுமையான செடிகள், இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் மெய்மறந்து ரசிப்பவர். இளம் பருவத்திலேயே தமிழில் அறிவாற்றல் கொண்டவர். கல்வெட்டு ஆய்வு செய்து கொண்டே பண்டைய மன்னர்களின் பெருமைகளையும் தர்மங்களையும் உலகிற்கு எடுத்துரைத்த சேதுராமனுக்கு 1956 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வழி வழியாக சமஸ்கிருத பாந்தித்துவம் நிறைந்த குடும்பத்தில் வந்த லலிதா என்ற பெண்ணை மணந்தார் இவர். சேதுராமன் கல்வெட்டுத் துறையிலும், மனைவி லலிதா சமூக சேவையிலும் ஈடுபட்டு அவரவர் வெற்றிகரமாக செயல்பட்டனர். திரு சேதுராமன் தம்பதிகளுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மனைவி லலிதா சேதுராமன் 1976 ஆம் ஆண்டில் ஈவ்ஸ் கிளப் என்ற மகளிர் சங்கித்தின் தலைவியாக இருந்து கொண்டு ஆற்றிய சமூகப் பணிகள் எண்ணிறந்தவை. சமூகத்தில் பாதிப்புக்கு உள்ளான பெண்களின் முன்னேற்றம் , சட்டம், கல்வி, விழிப்புணர்வு, வசதியற்ற 400 பெண்களுக்கு இலவச திருமணம், மாணவ மாணவிகளின் கல்விக்கு தொடக்கப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை உதவுதல், ஊனமுற்றோர் மரு வாழ்வுக்கு வழி செய்தல், முதியோர் பராமரிப்பு போன்ற எண்ணிறைந்த தொண்டுகளை செய்து வருகிறார் இவர். திருமதி லலிதா சேதுராமன் போற்றத்தக்க சமூகப் பணிகளை பாராட்டி சென்னை டைரக்டர் சுப்ரமண்யம் டிரஸ்ட், சமூகத் தொண்டாற்றும் சிறந்த பெண்மணி என்ற வகையில் ஸ்த்ரீ ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. சிறந்த சமூக சேவகியை தன மனைவியாகவும், தன் ஆய்வுப் பணிகளை தொடர்ந்திட்ட சேதுராமன் என்னும் கல்வெட்டுப் பூவினை இறைவன் தனக்கென்று சூட்டிக் கொண்டான் போலும், குடந்தை சேதுராமன் 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள் அன்று குடந்தையில் காலமானார்.